தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட உ.பி. மருத்துவர் கஃபில் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மருத்துவர் கஃபில் கான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநில அரசு கைது செய்தது. அவர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மதுரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். துவக்கத்தில் அவர் மீது 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கை வலுப்படுத்த 153 பி   மற்றும் 505(2 )ஆகிய பிரிவுகளையும் சேர்த்து அவர் மீது வழக்கு தொடுத்தது. பிப்ரவரி 10ஆம் தேதி அலிகர்  நீதிமன்றம் இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் மூன்று தினங்கள் கழித்து, எப்படியும் அவரை சிறையில் வைக்க வேண்டுமென்ற குரூர நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உ.பி அரசு மீண்டும் கைது செய்தது. 

இந்நிலையில் அவரது தாய் நுஸ்ரத் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால், உச்சநீதிமன்றம் 15 தினங்களுக்குள் இதுகுறித்து முடிவு எடுக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது பேச்சை தீவிரமாக ஆய்வு செய்து அவரது பேச்சில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான எவ்வித வார்த்தைகளும் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மதவெறி நோக்குடன் செயல்படும் மத்திய அரசும் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்- வகையில் செயல்படும் உத்தரபிரதேச மாநில அரசும் தங்களுக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிறுபான்மை மக்களின் தலைவர்களையும் தொண்டர்களையும் குறிவைத்து வேட்டையாடுவது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டது. 

அலகாபாத் நீதிமன்றம் உ.பி அரசு அரசின் தலையில் நன்றாக குட்டி உள்ளது. பீமா கொரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  எதிர்க்கருத்து தெரிவித்தால் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வது, அர்பன் நக்சலைட் என்று முத்திரை குத்துவது போன்ற பாஜக அரசின் மோசமான நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.மத்திய - மாநில பிஜேபி அரசுகள் இத்தகைய மதவெறி காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை கைவிட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக - மதநல்லிணக்கத்தை காக்க கூடிய அரசாக செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.