கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பானிபூரி ,   ஐஸ்கிரீம்  உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என  கர்நாடகா மாநிலம்  குடகு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  120க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது .  இதுவரை இந்த வைரசுக்கு 7,200 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை .  இதுவரை இந்தியாவில்  129 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை நாட்டில்  3 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக  எடுத்து வருகிறது .

 

மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கியதால் கர்நாடக மாநிலம்   கலபுரகி யை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார் அதைத்தொடர்ந்து கர்நானகத்தில் கொரோனா வைரஸ் பீதி அதிக அளவில் பரவியது.  இதுவரை கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா விழிப்புணர்வு களப்பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், அருந்துவதையும் ஐஸ்கிரீம் ,  பானிபூரி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என குடகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் கண்மணி ஜாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குடகு மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகமிருப்பதால் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார் .  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவுக்கு  தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார் .  பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை ,  கருவிகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது .  பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகத்தில் மாஸ்க் அணிந்தவாரு செல்கின்றனர் .