தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக  அமைக்கபட்டுள்ள குழு நேர்மையான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மா.பா.பாண்டியராஜன், பென்ஞமின், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பான கேள்விக்கு, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் இனி காங்கிரஸ் ஆட்சிக்கு அரசியல் எதிர்காலம் என்பதே கிடையாது என்றும் குறிப்பிட்டார். 

ஸ்டாலினால் தமிழ்நாட்டிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பிரசாந்த் கிஷோர் கூறுவதால் வெவ்வேறு வகையில் பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் ஆட்சியை புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், மக்கள் அதிமுக அரசு மீண்டும் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் திமுக கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான் கிடைக்கும் என்றும் உறுதிப்பட கூறினார். 

மேலும், 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேச திமுகவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றார், தமிழ்நாடு மீனவர்களுக்கு பச்சை துரோகம் செய்தது திமுக தான் எனவும் குற்றம்சாட்டினார். மீன்வர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர்,  மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்கள் உயிரிழந்ததற்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை ஓயமாட்டோம் என்றார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் குழு அமைத்துள்ளதாக கூறிய அவர், இந்த குழு நேர்மையான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.