எங்களது கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறினால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.  இது அதிமுக பாஜக  இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக,  பாமக , பாஜக , தேமுதிக ,  தமக, உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை.

 

ஆனாலும்கூட எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பாஜக  தெரிவித்துவருகிறது.  எப்படியாவது அதிமுக கூட்டணியுடன்  தமிழகத்தில் ஒரளவுக்கு காலூன்றி விட வேண்டுமென பாஜக திட்டமிட்டு வரும் நிலையில்,  தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்  மூத்த அரசியல்வாதியுமான செம்மலை,  பாஜக ,  அதிமுக கூட்டணியில் வெடிவைக்கும் விதத்தில் பேசியுள்ளார்.   தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ செம்மலை ,  அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறினால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில்,  வரும் டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அதிமுக,  திமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில்  செம்மலை இவ்வாறு தெரிவித்திருப்பது இரு கட்சி தொண்டர்களிடையே மட்டும் அல்ல தலைமைகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக முதுகில் சவாரி  செய்யலாமென பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், செம்மலையின்  பேச்சு பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது.