கேரளா, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றால்தான் அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயமாகத் தேவை. அதிமுகவை 3 மாதங்களிலும், பாஜகவை 3 ஆண்டுகள் கழித்தும் தோற்கடிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக, பாஜக அதிகாரம், பணப்பலத்துடனும், அதிகார துஷ்பிரயோகத்துடனும் சந்திக்க உள்ளன.


2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை என்றார்கள். ஆனால், அதை கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்கள் தடுத்து நிறுத்தின. தற்போது கேரளா, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றால், அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும். இல்லாவிட்டால் அவர்களின் ஆணவம், அகந்தையை அடக்க முடியாது. ஒரு கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் நான்தான் நிரந்தர முதல்வர், நான்தான் நிரந்த பிரதமர் என்ற ஆணவம் வந்துவிடும்.