தேர்தல் அறிவித்துவிட்டால், கொடுப்பது தெரியக்கூடாது... வாங்குவது தெரியக்கூடாது... எடுப்பதும் தெரியக்கூடாது. ரகசியக்கூட்டம், ரகசிய ஆலோசனை எல்லாம் பண்ணுவோம், எப்படி ஜெயிப்பது என்று நமக்குத் தெரியும். என்று விருதுநகரில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடு தான், கெடாவெட்டு தான் என்றும், அனைவருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம்தான் அதிமுக என்றும் கூறினார். 

திமுக ஒரு ஐம்பெரும் தலைவர்கள் மட்டுமே கொண்டுள்ள கட்சி என்றும் அந்த கட்சி வடநாட்டு காரரை நம்பி தான் உள்ளது என்றும் அவர் சொன்னால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா நான் ஒபனாகப் பேசுகிறேன் என்றார். 

தற்போது தேர்தல் ஒன்றும் நடக்கவில்லை. பத்திரிகையாளர்கள் பதிவுகூட பண்ணிக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனை கிடையாது. ஒண்ணும் கவலை கிடையாது. இதையெல்லாம், இப்போதுதான் பேச முடியும். தேர்தல் அறிவித்துவிட்டால், கொடுப்பது தெரியக்கூடாது; வாங்குவது தெரியக்கூடாது; எடுப்பதும் தெரியக்கூடாது. ரகசியக்கூட்டம், ரகசிய ஆலோசனை எல்லாம் பண்ணுவோம். எப்படி ஜெயிப்பது என்று நமக்குத் தெரியும். திமுகவிற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் யாருடைய ஓட்டும் கிடைக்காது, திமுக வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். 

இன்றும் ஸ்டாலின் திமுக பத்துக்கு பத்து அறையில் உள்ளது, அண்ணா ஆரம்பித்த திமுக தற்போது இல்லை, ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ் பெயர் கிடையாது  ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு தமிழைப் பற்றிப் பேசும் யோக்கியதை ஸ்டாலினுக்கு கிடையாது.  தமிழர்களைப் பற்றி பேசும் உரிமை அதிமுக தொண்டர்கள் மட்டுமே உண்டு, தமிழருக்கும், தமிழுக்கும் துரோகம் செய்து தமிழை விற்றுப் பிழைக்கும் கூட்டம் தான் திமுக என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார்.