சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் தேவை. இந்த விஷயத்தில் கேரள மக்கள் புத்திசாலிகளாக உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் எந்தக் கட்சியையும் ஆட்சி செய்ய விடுவதில்லை. ஏனென்றால், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவார்கள்.


டெல்லியில் கடுங்குளிரில் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடிவருகிறார்கள். அவர்களுடைய குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்பது போல் ஆட்சி செய்கிறார்கள். பிரதமரின் கிஸான் திட்டத்தில் பல பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்தத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதை அறியலாம். இனி காங்கிரஸை நம்பிதான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு செலவிலும் ஓ. பன்னீர்செல்வம் கட்சி செலவிலும் விளம்பரம் செய்கிறார்கள். இது எங்கே போய் நிற்கும் என்பது 3 மாதங்களுக்குப் பிறகு தெரிந்துவிடும்.” என்று ப.சிதம்பரம் பேசினார்.