அதிமுக - தேமுதிக இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. பாமகவுக்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்கும் நிலையில், 12-14 தொகுதிகள் வரை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார். இதேபோல அவருடைய மனைவியும் கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தொகுதி பெயர் குறிப்பிடாமல் விருப்ப மனு வழங்கினார்.
இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார். ஆனால், பிரேமலதா போல தொகுதி பெயர் குறிப்பிடாமல்தான் விருப்ப மனு அளித்தார். விருப்ப மனு அளித்த பிறகு விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கட்சித் தொண்டர்கள் விரும்பியதால் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விஜயகாந்திடம் சொன்னதும், 'சென்று வா, வெற்றி நமதே!' என்று தெரிவித்தார். நான் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் என்னைத் தொண்டர்கள் வெற்றி பெற வைப்பார்கள்.” என்று தெரிவித்தார். கூட்டணி குறித்து கேள்விக்கு பதிலளிக்க விஜய பிரபாகரன் மறுத்துவிட்டார்.

இந்தத் தேர்தலில் ஒரே குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் என மூன்று பேர் விருப்ப மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியிலும், பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியிலும், விஜய பிரபாகரன் அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிட உத்தேசித்துள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணியில் இவர்கள் மூவரும் விரும்பும் தொகுதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய ஒரே கேள்வி!