மோடி சிறப்பாக ஆட்சி செய்து நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்வதால் பாஜகவில் இணைந்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரசிலிருந்து விலகிய அவர் டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தென்னிந்திய பொறுப்பாளருமான சி.டி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கமிட்டி அதிரடியாக குஷ்புவை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தது. குஷ்பு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணையபோகிறார் என கடந்த சில வாரங்களாக வதந்திகள் இருந்த நிலையில் அவர் பாஜகவில் இணையபோவது  இன்று காலை உறுதியானது. இதனையடுத்து பாஜகவின் சேர்வதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகனுடன் குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் வந்தார். அப்போது பாஜக தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன் என்றார். 

மேலும் பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவரால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார், பிரதமர் மோடியை போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சி கட்டிலில் அமரா கடுமையாக உழைப்பேன் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள குஷ்பை வரவேற்பதாக கூறினார். குஷ்பு போல ஏராளமான பிரபலங்கள் பிற கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர், பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இன்னும் பலர் இணைய உள்ளனர் எனக் கூறினார். பாஜக ஆட்சி தமிழகத்திலும் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் தற்போது பாஜகவுக்கு இது அளவிற்கு வரவேற்பு உள்ளது என கூறினார். 

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ, 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார், அங்கு அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபகாலமாக காங்கிரசில்  சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார், அதே நேரத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை அவர் வரவேற்றுப் பேசியிருந்தார். அவரின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் எதிர்பார்த்தபடியே அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.  நடிகை குஷ்பு தனக்கென எந்த கொள்கையும் இன்று முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காக அடிக்கடி  கட்சி மாறி வருவது தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.