தமிழக காங்கிரஸும் ஆரவார அடிதடிகளும் அத்தனை நெருக்கமானவை. எந்த ஊரில் என்ன ஆலோசனை கூட்டம் நடந்தாலும், அதன் முடிவில் ஒரு ரகளை நிகழ்ந்து சில வேட்டி கிழிப்புகள் அரங்கேறவில்லையென்றால் அது காங்கிரஸ் கூட்டமாகவே இருக்கமுடியாது! என்பது உலகமறிந்த விஷயம். யார் தலைமையில் கூட்டம் நடந்தாலும் இதுதான் தலையெழுத்து. 

இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஆலோசனை நிகழ்வில் ரகளையை ஆரம்பித்த காங்கிரஸ்காரர்களை, மேலிட பார்வையாளரான சஞ்சய் தத் சகட்டுமேனிக்கு திட்டி, வாயை மூடி உட்கார வைத்த அதிசயம் டெல்லி வரைக்கும் வாட்ஸ் அப்பில் வைரலாகியிருக்கிறது. 

அதாவது தமிழகத்தில் ராகுல் விசிட் மற்றும் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யும் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய்தத் தலைமையேற்றி நடத்திக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, மாநில துணைச்செயலாளரான ஏ.பி.சி.வி.சண்முகம் “நம்ம இயக்கம் ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இதனால கட்சிக்காரங்க எல்லா மாவட்டத்திலும் சோர்ந்து கிடக்கிறாங்க. அதிலும் திராவிட கட்சிகள் வலுவாக இருக்கிற இந்த தெற்கு மாவட்டங்களில் நம்ம நிலைமை மோசமா இருக்குது. தலைமை நிர்வாகிகள் இதையெல்லாம் கவனிக்கணும். உள்ளாட்சி தேர்தலிலாவது உருப்படியான ஆளுங்களுக்கு உங்களால சீட் வாங்கி தரமுடியுமா?....” என்று கொட்டி தீர்க்க துவங்கியிருக்கிறார். உடனே டென்ஷனான சஞ்சய்தத் எழுந்து ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி பழைய பல்லவியை பாடுவீங்க? இனி கட்சியை எப்படி வெற்றிகரமா கொண்டு போலாமுன்னு யோசிங்க.’ என்றபடி அவரிடமிருந்து மைக்கையும் பறித்துவிட்டார். 

இந்த அதிரடியை எதிர்பாராத சண்முகம் முகம் வெளிறிப்போய் உட்கார்ந்தாலும், அவர் முகம் கோபத்தில் கடுகடுத்திருக்கிறது. உடனே அவரது ஆதரவாளர்கள் எழுந்து ஏலே, வாலே, போலே! என்று சவுண்டு விட்டிருக்கின்றனர் ஆளாளுக்கு. 

இதில் கடுப்பின் உச்சத்துக்கு போன சஞ்சய்தத்தோ மீண்டும் எழுந்து “ஹலோ  பிரதர்ஸ்! ராகுல்ஜி சொல்லித்தான் நான் இங்கே வந்திருக்கேன். அவரோட கட்டளைப்படி எல்லா இடங்களிலும் நம்ம இயக்கத்தின் ஆலோசனை கூட்டங்கள் அமைதியா நடக்கணும். கட்சியோட நல்ல பெயருக்கு யாரச்சும் பிரச்னை பண்ணினால் என்ன நடவடிக்கை வேணா எடுக்கலாமுன்னுன் தலைவர் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கார். 

அதனால அமைதியா உட்காருங்க. இல்லேன்னா, ரகளை பண்ணுற அத்தனை பேரையும் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் பண்ணிடுவேன். அப்புறம் தேர்தல் நேரத்துல கரைவேஷ்டி கட்டிட்டு கெத்தா கட்சி வேலையை பார்க்க முடியாது.” என்று கர்ஜித்துவிட்டாராம். ’என்னது டிஸ்மிஸா? ஏம்ணே இத மொதல்லேயே சொல்ல கூடாதா! நாங்க சும்மா ஜாலிக்கு சவுண்டு கொடுத்தோம்.’ என்று சொல்லாத குறையாக சைலண்டாகிவிட்டனராம்  தூத்துக்குடி கதர்கள். 

தத்து தைரியசாலிதாம்லே!