I will solve your debt problem

கந்து வட்டி பிரச்சனையில் விஷால் சிக்கி தவிப்பதாகவும், இந்த கடனை அடைக்கவே தேர்தலில் போட்டியிடுகிறார் என ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக செய்திகள் வெளியானபோதே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சார்பற்று தயாரிப்பாளர் சங்கம் செயட்பட்டு வருகிறது என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கூறி வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக, சென்னை தண்டையார்போட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் எழுந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஆர்.கே.நகரில் போட்டியிடட்டும் என்று கூறி இயக்குநரும், நடிகருமான சேரன், சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

விஷால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் ராதாரவி கூறும்போது, விஷால் ஒரு குளத்து ஆமை என்றும் ஒரு இடம் நல்லா இருந்தா அங்கே போய் கெடுத்துவிடுவார் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனன், நடிகர் விஷால் கந்து வட்டி பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார் என்றும், அவரது படங்களும் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன என்றும் கூறியுள்ளார். உன்னுடைய கடன் பிரச்சனையைத் தீர்ப்பதாக கூறி, விஷாலை, டிடிவி தினகரன் போட்டியிட வைத்துள்ளார் என்றார். இதன் மூலம் அதிமுக ஓட்டுகளை அவர் பிரிக்க நினைப்பதாகவும் மதுசூதனன் கூறினார். விஷால் அல்ல... வேறு எந்த நடிகர் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.