Asianet News TamilAsianet News Tamil

ஐடி ரெய்டு எதிரொலி.. கோடநாடு எஸ்டேட்டை மீட்டே தீருவேன்..! தீயாய் வேலை செய்யும் பீட்டர்..!

I will recover kodanadu estate said ex owner
I will recover kodanadu estate said ex owner
Author
First Published Nov 14, 2017, 2:16 PM IST


தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்ட கோடநாடு எஸ்டேட்டை சட்டரீதியாக மீட்பேன் என அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. அதற்கு அருகிலேயே சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்டும் உள்ளது. கோடநாடு எஸ்டேட் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த அதன் முன்னாள் உரிமையாளரான பீட்டர் கிரேக் ஜோன் என்பவரிடம் இருந்து கோடநாடு எஸ்டேட் மிரட்டி வாங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அந்த எஸ்டேட்டை மீட்க அவர் முயற்சி செய்துவருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கோடநாடு எஸ்டேட்டை சட்டரீதியாக மீட்பேன் என பீட்டர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கோடநாடு எஸ்டேட்டை மீட்க பீட்டர் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் எஸ்டேட்டை மீட்டுவிடலாம் என்ற அவரது நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில், வருமான வரித்துறையின் சோதனை புயலில், கோடநாடு எஸ்டேட்டும் சிக்கியுள்ளது. சோதனை நடத்தப்பட்ட மற்ற அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைய, கோடநாடு எஸ்டேட்டில் இன்று 6-வது நாளாக சோதனை நடந்துவருகிறது. 

இந்நிலையில், கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் கிரேக் ஜோன், கடந்த 1975-ம் ஆண்டு 33 லட்சம் ரூபாய்க்கு கோடநாடு எஸ்டேட்டை வாங்கினோம். அதில் 50 ஏக்கரை, சில காரணங்களால் விற்றோம். ஆனாலும், 900 ஏக்கர் எஸ்டேட் கைவசம் இருந்தது. பின்னர் கடன் காரணமாக அதையும் விற்க முடிவு செய்தோம். இதையறிந்த சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தினர் அதை தங்களிடம் விற்குமாறு எங்களை அணுகினர். ஆனால் அவர்களுக்கு விற்க மனமில்லை என்பதை அவர்களிடமே கூறியபிறகும்கூட அவர்களுக்கே கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

I will recover kodanadu estate said ex owner

ஒருகட்டத்தில், சசிகலா தரப்பினர் அரசு அதிகாரிகளுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து எஸ்டேட்டை 9 கோடியே 50 லட்சத்துக்கு விற்பதாக கூறினோம். அவர்கள், 7 கோடியே 50 லட்சம் பணத்தை கொடுப்பதாகவும் மேலும் வங்கிக் கடனை அடைப்பதாகவும் கூறினர். இதன் காரணமாக எஸ்டேட்டை அவர்களிடம் விற்றோம். ஆனால், அவர்கள் தருவதாக சொன்னதில் பாதி பணத்தை கூட தரவில்லை. வங்கிக் கடனையும் அடைக்கவில்லை. 

அதன்பின்னர் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் குடியேறிவிட்டேன். அதன்பிறகு எத்தனையோ முறை ஜெயலலிதாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது, வருமானவரித்துறையினரும் சோதனை நடத்திவருகின்றனர். இதை எங்களுக்கு சாதகமாக்கி சட்ட ரீதியாக கோடநாடு எஸ்டேட்டை மீட்கப் போராடுவேன் என பீட்டர் கிரேக் ஜோன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios