அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி விலகி, திமுகவில் இணைந்ததுபோல் நான் எந்த காரணத்தை கொண்டும் டிடிவி.தினகரனை விட்டு விலக மாட்டேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்க அதிமுகவினர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பி.எஸ். தனியாக விலகி கட்சியை தொடங்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சிலர் அவருடன் சென்றனர்.

பின்னர், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், ஆர்கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு அதிமுக சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறி டெல்லி போலீசார், டிடிவி.தினகரனை கைது செய்தனர்.

இந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தார். இதனால், டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்ட்டார். ஆனால், அவருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட சில எம்எல்ஏக்கள் அவருடன் இருந்தனர்.

பின்னர், அதிமுகவுக்கு போட்டியாக அமமுக என்ற கட்சியை டிடிவி.தினகரன் தொடங்கினார். இதில் அதிருப்தியடைந்த நாஞ்சில் சம்பத். அக்கட்சியில் இருந்து விலகினார். இதற்கிடையில், முதலமைச்சரை பதவி விலக செய்ய வேண்டும் என 18 எம்எல்ஏக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கவர்னரிடம் கொடுத்தனர்.

இதற்கான விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால், 18 எம்எல்ஏக்களுக்கும் கொடுத்தார். ஆனால், அதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என கூறி உத்தரவிட்டார்.

இதையடுத்து தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அதிருப்தியுடன் இருந்தனர். சிலர், கட்சி கூட்டங்களிலும், ஆலோசனை கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தனர். அதில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து செந்தில்பாலாஜி, அமமுகவில் இருந்து திமுகவில் இணைவதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதன்படி நேற்று, தனது ஆதரவாளர்களுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார். மேலும், அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட அமமுக அரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அந்த கட்சியில் இருந்து விலகமாட்டேன். தொடர்ந்து நான் டி.டி.வி. தினகரன் கட்சியில் தான் இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும், அவரை விட்டு விலக மாட்டேன் என்றார்.