மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயன், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயன், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயன், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர். இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பூந்தமல்லியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கோடநாடு விவகாரத்தில்  சாமுவேல் மாத்தியூவை  திமுக பின்னணியில் இருந்து இயக்குவதாக குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்தியுள்ளதாகவும்,குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை, திமுகதான் ஜாமீனில் எடுத்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

 

7 முறை ஜெயிலுக்கு போய் வந்தவன் நான்  இது போன்ற  பொய் குற்றச்சாட்டுகளுக்கு  எல்லாம் நான் பயப்படப்போவதில்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.