தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்று கிண்டலடித்துள்ளார். 

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை வெளியிடப் போவதாகவும் பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அந்தப் புகாரை அளிக்கப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால், அண்னாமலை எந்த அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை எழுப்பப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை இன்று சென்னையில் கட்சி தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுகாதாரத் துறையில் ஊழல் புகார் ஒன்றை அண்ணாமலை கூறினார். தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததால் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுபூர்வமாகக் குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரமே இல்லாமல் பேசுகிறார். டெண்டரை திறப்பதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என ஊகங்களின் அடிப்படையில் அண்ணாமலை பேசி வருகிறார்.

முறைகேடு நடந்து இருந்தால் அதனை அண்ணாமலைத்தான் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகள் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்து போய் விடும். டெண்டர் பணிகள் நிறைவடையும் முன்பே ஊழல் நடைபெற்றுள்ளது அல்லது நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பிறகுதான் இந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது. அதில் தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.