அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பி.எஸ் மேல் தான் அதிகம் மரியாதை என துக்ளக் ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் நிங்க ஆம்பளயா? எனக் கேட்டு குருமூர்த்தி அசிங்கப்படுத்தியதாக வீடியோ வெளியானது. இது அதிமுகவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தான் அப்படிக் கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் குருமூர்த்தி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஓ.பி.எஸ்.,சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில்  குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது.

இதை ஏற்கெனவெயே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ.பி.எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

எனவே முன்னும், பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பி.எஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து...’’எனப் பதிவிட்டுள்ளார்.