வெறுப்பு அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன்.. என் நாட்டை இழக்க மாட்டேன்.. ராகுல் காந்தி..!
வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் இன்று மேற்கொள்கிறார். இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மரக்கன்று நட்டுவைத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். இதனையடுத்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் செல்ல உள்ளார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு மூலம் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை 4.30 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், என் நாட்டை இழக்க மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வெறுப்பு அரசியலுக்கும், பிரிவினைவாதத்துக்கும் எனது தந்தையை இழந்தேன். ஆனால் அதேபோல் அதே சக்திகளுக்கு எனது தேசத்தை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும், பயத்தை நம்பிக்கை வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.