வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின் ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் ஜெயலலிதா மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தைரியமானவர் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை சட்டப்பேரவைக்கு கூறவில்லை என்றும், நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் தற்கொலை தொடர்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மீது கருணாநிதிக்கும், எனக்கும் மிகுந்த மரியாதை இருந்தது. என்னை பார்த்து சிரித்ததால் தனது முதலமைச்சர்  பதவியை இழந்தார்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அப்துல் கலாம் குறித்து கருணாநிதி பேசியதாக தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார் ஓபிஎஸ். அப்துல் கலாமை கொச்சைப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது; எத்தனை லட்சம் வாக்குகள் என்பதைதான் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசினார்.