திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது என மு.க அழகிரி தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மழுப்பலாக பதில் கூறி சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. வரும் தேர்தலிலும் வழக்கம்போல அதிமுக-திமுக இடையே நேரெதிர் போட்டி நிலவும் சூழலே உருவாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளும் சகிதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒருவர் மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இதனால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து பின் வாங்கி உள்ளார். இந்நிலையில் திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட  அழகிரி விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளார். 

அப்போது பேசிய அவர், எந்த தவறும் செய்யாத என்னை ஏன் கட்சியில்  இருந்து நீக்கினீர்கள் என திமுக தலைமையை நோக்கி கேள்வி எழுப்பினார். கட்சியில் என் செல்வாக்கை விரும்பாத ஸ்டாலின் என்னை ஓரம் கட்ட  பல சூழ்ச்சிகளை செய்துள்ளார். என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் தலைவர் கருணாநிதியிட்ம கூறி என்னை கட்சியிலிருந்து நீக்க வைத்தார்.  நான் பலமுறை கட்சியில் இணைய முயற்சி செய்தேன், ஆனால் அதில் பலன் இல்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஆகி விடலாம் என்ற கனவில் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. எனது ஆதரவாளர்கள் அதை நடக்க விடமாட்டார்கள் என ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கர்ஜித்துள்ளார். இந்நிலையில் திருச்சி கல்லக்குடி ரயில் நிலையத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.  பின்னர் அங்கு செய்தியாளர் சந்தித்த அவர், 

எனது தாத்தா கலைஞர் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய இடத்தை இன்று பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் மீது இந்தியைத் திணிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இப்போது உள்ள ஆட்சியாளர்களான பாஜக எப்படியாவது தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகிறது. ஆனால் தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி கிடையாது. ஆனால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்றார்.  அப்போது மு. க அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக வைத்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. எனக்கு அதுபற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது எனக்கூறி அங்கிருந்து வேகமாக விடைபெற்றார் உதயநிதி ஸ்டாலின்.