சினிமா பிஸ்னஸில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் வந்தபோதும் கமல்ஹாசனின் முகத்தில் பயம் தெரிந்ததில்லை! வெறுப்பின் உச்சம் தொட்டிருக்கிறார், விரக்தியின் மிச்சம் காட்டியிருக்கிறார். ஆனால் அரசியல் நாயகனாய் அவதரித்துவிட்ட பின் பரிதாபத்தையும், பச்சாதாபத்தையும் வரவழைக்கும் வகையில் பேசுவதே அவருக்கு டிரெண்டாகி விட்டது.

சினிமாவில் கமலின் காதல் காட்சிகளுக்கு இணையானவை அவர் கண்ணீர் விடும், அல்லது பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காட்சிகள். மகாநதி, தேவர்மகன், தெனாலி என்று அவரது ஹைலைட் கண்ணீர் காட்சிகளை அப்ளாஸுடன் அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிட்டத்தட்ட அதே ஸ்டைலைத்தான்  இப்போது அரசியலிலும் ஃபாலோ செய்கிறாரா கமல்? என்று நினைக்க வைக்கிறது.

‘என் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது.  உயிர் போகு வரை இனி மக்களுக்காக வாழப்போகிறேன்’!

என்று சொல்லியிருப்பதும், ‘எனக்கான வாழ்க்கையை முடித்துவிட்டேன். தற்போது புதிய வாழ்க்கையை துவக்கியுள்ளேன். அரசியலில் இருந்து பின் வாங்கும் எண்ணமே இல்லை. இனி இறுதி வரை இதுதான் என் வாழ்க்கை.” என்றும் கூறியிருக்கிறார்.

பொதுவாக பொதுவெளி பேட்டிகளில் கமல்ஹாசன் மிக கெத்தாகவும், ஆண்மைத்தனத்தில் சமரசம் செய்து கொள்ளாமலும் பேசுவார். ஆனால் அரசியல் பாதையை துவக்கியதும் அவர் இப்படி பேசிட காரணம், அரசியலில் குறுகிய காலத்தில் மளமளவென மக்களை சென்றடைய இப்படியொரு டிரிக்கை கையாள்கிறாரா? என்று கேட்கிறார்கள் விமர்சகர்கள்.

மக்களின் மனதில் பரிதாபத்தை வரவழைத்துவிட்டால் அதன் மூலம் மிக எளிதாக வாக்கு அறுவடை செய்திட முடியுமென்பதும் அரசியல் கணக்குதான்.

ஆனால் இனி என் வாழ்க்கை மக்களுக்காகத்தான், உயிரே மக்களுக்குதான்! அவர்களுக்காக அதை இழப்பதிலும் கவலையில்லை! எனும் ரேஞ்சில் பேசும் கமல், அதை தன்னை சுற்றி மன்றத்தை சேர்ந்த பாதுகாவலர்களையும், பவுன்சர்களையும் நிறுத்திக் கொண்டு பேசுவதுதான் வேடிக்கை.

சாமான்ய ரசிகனோ, தமிழனோ அவரிடம் கை கொடுத்துவிட முடிகிறதா ஆர்வத்தில்? என்று நறுக்கென கேட்கிறார்கள் விமர்சகர்கள்.
சொல்லுங்க கமல்!