எனக்கு பல கோடி கடன் இருக்கு.. இந்த மருத்துவமனையை பேங்க்ல லோன் போட்டு தான் கட்றேன்.. முன்னாள் அமைச்சர் காமராஜ்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. இதனை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சோதனை மூலம் என்னையோ அதிமுகவின் சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. ஒற்றைத் தலைமை வந்தால் பல்வேறு கட்சிகளுக்கு ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாருர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ், இவரது மூத்த மகனான டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனாரான சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து, நேற்று அதிகாலை முன்னாள் அமைச்சர் காமராஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- அதிகாலையிலேயே காமராஜ் வீட்டில் திபுதிபுவென நுழைந்த விஜிலன்ஸ்.. FIRல் உள்ள விவரங்கள் என்ன? பரபரப்பு தகவல்.!
இந்த சோதனை முடிவில் ரூ 41.06 லட்சம் பணம் மற்றும் 963 சவரன் நகைகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் 15.50 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கி பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐ போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் காமராஜ்;- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. இதனை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சோதனை மூலம் என்னையோ அதிமுகவின் சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. ஒற்றைத் தலைமை வந்தால் பல்வேறு கட்சிகளுக்கு ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது.
பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டதை விட எனக்கு அதிகம் கடன் உள்ளது. எனது மகன்கள் இருவர் மருத்துவர்கள். அவர்களுக்கு இரு வங்கியில் பலகோடி கடன் வாங்கி தான் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்டுகிறோம். காலையிலிருந்து இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என காமராஜ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- முன்னாள் அதிமுக அமைச்சரிடம் இருந்து இத்தனை லட்சம் பறிமுதலா? ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!!