எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் எனக்கு முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஜெ.தீபா கலந்து கொண்டார். அப்போது முசிறி, கைகாட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரவையின் ஒன்றியச் செயலாளர் மதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகக் கூட்டத்தில் பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதா பிறந்தநாள், வரலாற்று சிறப்புமிக்க தினம். எம்.ஜி.ஆர். புகழ் நிலைத்திட நல்லாட்சி வேண்டும். தீய சக்திகளை விரட்டிவிட்டு, மக்கள் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

இதன் பின்னர் தீபா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். ஆனால் எனக்கு முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றார்.

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வருவது தேவையில்லை. அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் கமலும் அரசியல் கட்சி துவங்கியுள்ளார்.

காவிரி நதிநீர் பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவிட்டது. மக்கள் பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை. காவிரி நீரைப் பெற நீதிமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைத் தெரிவித்து உரிய தண்ணீரைப் பெற்றிருக்க வேண்டும். பிற மாநிலங்கள், தங்களது வாதத்தை சரியாக முன் வைத்து உரிய தண்ணீரை பெற்றுள்ளது. அதைப்போன்று தமிழகம் செய்ய தவறிவிட்டது. 

ரஜினி உட்பட பலரது அரசியல் பிரவேசமும் ஒரே மாதிரிதான் இருக்கும். மக்களுக்கு யார், என்ன நன்மை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பின்னணி அமையும் என்று ஜெ.தீபா கூறினார்.