திருச்சி விமான நிலையத்தில், நடந்த சம்பவத்தால், எனக்கு பாதுகாப்பு பலப்படுத்து சூழல் வந்துவிட்டது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒ.பன்னீர்செல்வம் திருச்சி சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர், திடீரென அவரை தாக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை மடக்கி பிடித்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து காரில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து திண்டுக்கல் சென்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம், பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், எனக்கு பாதுகாப்பு பலப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. மர்மநபரை, என்னுடன் வந்த பாதுகாப்பு வீரர்கள், பிடித்த அப்புறப்படுத்தினர். அப்போதுதான் தெரிந்தது, அவரிடம் கத்தி இருந்தது என்று.
3 அணிகளும் இணைந்து, கட்சியை பலப்படுத்துவோம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அதை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.
அதேபோல், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் பங்காளி சண்டை நடப்பதாக கூறினார். அதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.