மணிரத்னம் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் ஆதரவை கோரும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை  அலுவலகத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.  இந்த சந்திப்புக்குப் பின்னர்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு-பாஜக முழு ஆதரவு அளிக்கிறது என்றார், இதை பல முறை அதிமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரும் பாஜக தேசிய தலைமையை சந்தித்து உறவை உறுதிச் செய்துள்ளனர் என்றார்.


 
இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக  பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றார். விக்கிரவாண்டியில் திமுக தோற்க வேண்டும் என்றும், நாங்குநேரியில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் கூறிய அவர், அதிமுக பாஜக இடையே ஏற்கனவே கூட்டணி இருப்பதால் தற்போது கூட்டணியை தொடர்வதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை என்றார். தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜகவின் சார்பில் யாரெல்லாம் கலந்து கொள்ள உள்ளோம் என்பது குறித்து விரைவில் அதிமுகவிடம்  பட்டியலை வழங்குவோம் என்றார்.   திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி என்றார்.

 

அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  அதுபோல எந்த கருத்து வேறுபாடும் தங்களிடம் இல்லை என்று கூறிய அவர்,  அதிமுக பாஜக இடையே இடைவெளி உருவாகவில்லை என்றார் இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, மணிரத்தினம் கைதுக்கு என்ன காரணம் என தெரியவில்லை முழு விவரம் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது விவரம் தெரிந்த பிறகு கூறுகிறேன் என்றார்