எனக்கு இந்தி தெரியாது.. மாமன்றத்தை அதிர வைத்த பஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்
அதற்கு எனக்கு இந்தி தெரியாது என உமா ஆனந்தன் சத்தமாக பதிலளித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பேசிய அவர் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் தேவை என்றும் வலியுறுத்தினார்,
பாஜக சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என மாமன்ற கூட்டத்தில் கூறியதை திமுக உறுப்பினர்கள் கைத்தட்டி வரவேற்றனர். இந்த சம்பவம் மாமன்றத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. அதில் 12 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரியா ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனித்து களமிறங்கிய பாஜக சார்பில் மாம்பலம் பகுதியில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்.
பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வார்டு உறுப்பினரும் உமா ஆனந்தனே ஆவார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது, இந்தியாவின் மொழியாக இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக நாம் பயன்படுத்த வேண்டும் இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்தி திணிப்பை ஏற்கமுடியாது என்றும் அரசியல் கட்சிகள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. அதில் அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர், மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது, முதல் முறையாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மன்றத்தில் பேசினார், அப்போது நமஸ்காரம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வணக்கம் என சத்தமாக கூறினர். ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகள் கலந்து தான் நான் பேசுவேன் என உமா ஆனந்தன் கூறினார். அப்போது இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர். அதற்கு எனக்கு இந்தி தெரியாது என உமா ஆனந்தன் சத்தமாக பதிலளித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பேசிய அவர் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் தேவை என்றும் வலியுறுத்தினார்,
அதாவது உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என கூறியபோதும் அவையிலிருந்த திமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தது ஹைலட்டாக அமைந்தது, மத்திய அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநிலங்களும் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர திமுக- அதிமுக என அனைத்து கட்சிகளும் இந்தித் திணிப்பு கூடாது என்றும், இந்தி தெரியாது போ என எதிர்ப்பு காட்டி வருகின்றனர். அதேபோல பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தனும் எனக்கு இந்தி தெரியாது என கூறியதும் திமுக கவுன்சிலர்கள் கைதட்டி ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.