சிறு நரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டி அடித்துவிடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டு விடும். இது அனைத்தையும் கட்சித் தலைமை கவனித்துக்கொள்ளும், பாட்டாளியான நீ இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நமது வேட்பாளர்கள் வெற்றிபெற மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேள். 

கட்சிக்கு துரோகம் செய்யும் சிறு நரிகள் கட்சியில் இருக்கின்றன என்பது தனக்கு நன்றாக தெரியும், அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு மட்டும் வாக்கு கேளுங்கள் என தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய உடன் பாமகவின் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் செய்த துரோகம் தான் காரணம் என ராமதாஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டு வரும் நிலையில், மீண்டும் கட்சிக்குள் சிறு நரிகள் இருக்கிறது என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வஞ்சிக்கப்பட்ட வன்னிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பாமக என்ற கட்சியை தொடங்கினார் ராமதாஸ். ஆரம்பத்தில் சமூகநீதி தலைவராக அறியப்பட்ட அவர் காலப்போக்கில் சாதித் தலைவர் என்ற வலையில் வலுவாக சிக்கிக் கொண்டார். அதற்கு அவர் வகுத்த அரசியல் வியூகங்களும், தவறான முடிவுகளுமே காரணம். இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி அவர் கூட்டணி வைத்தது, வன்னிய மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கை அற்றுப் போகச் செய்தது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் வலுவாகவே இருத்தது. இனி அதிமுகவுடன் பாமக எந்த காலத்திலும் கூட்டணி வைக்காது என்று செல்வி ஜெயலலிதா பகிரங்கமாகவே அறிவித்தார்.

ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பாமக, ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க ஆரம்பித்தது. ராமதாசின் இந்த முடிவு வன்னிய மக்கள் மத்தியில் அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சீர்குலைத்தது. ஒரு காலத்தில் வட மாவட்டங்களின் கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களையும், எம்பிக்களை கொண்டிருந்த பாமக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிப்போனது. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, கேட்ட இடங்களை அதிமுக வழங்கவில்லை என்ற அதிருப்தி பாமகவுக்கு ஏற்பட்டது. பின்னர் மீதமிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதையே காரணமாகக் கூறிய அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது. ஆனால் அதில் தனித்து போட்டியிட்டும் அக்கட்சியால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறமுடியவில்லை.

இந்நிலையில்தான் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்தே களமிறங்கியுள்ளது பாமக. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த வரை பாமக அதிக இடங்களில் வெல்ல முடியாமல் போனதற்கு காரணம், கட்சிக்குள் local Understanding இருந்ததுதான் என்றும், அதற்கு கட்யில் உள்ள கருப்பு ஆடுகள் தான் காரணம் என வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார் ராமதாஸ். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தும் தனக்கும், தனது கட்சிக்கும் உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை அவர் மேடைகளில் அப்பட்டமாக வெளிபடுத்தினார். கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனாலும் பாமகவால் இன்னும் ஆட்சிக்கு வரமுடியவில்லை, இது என் தவறா? அல்லது உங்கள் தவறா (நிர்வாகிகள்) என மேடைதோறும் தனது இயலாமையை வெளிப்படுத்தி வருகிறார் ராமதாஸ். 

மறுபுறம் இனி மீண்டும் பழைய தவறை செய்யப்போவது இல்லை, என்ன நடந்தாலும் சரி இனி பாமக தலைமையில்தான் கூட்டணி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில்தான் கூட்டணி, அன்புமணி ராமதாஸை முதல்வராக்குவதே லட்சியம் என கங்கணம் கட்டி பாமகவை தொண்டர்களையும் ராமதாஸ் உற்சாகப்படுத்தி வருகிறார். அதேநேரத்தில் கட்சிக்குள் கருப்பு ஆடுகள் இருக்கிறது, அவைகளை விரைவில் களை எடுக்கப்படும், கட்சியின் வீழ்ச்சிக்கு துரோக அரசியல் தான் காரணம் என சொந்தக் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் அடிக்கடி வறுத்தெடுத்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விவாகாரத்தில் ராமதாசின் அறிக்கை அதை வெளிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பரப்புரை என்ற அடுத்த கட்ட நிலையை நோக்கியே நகர்ந்திருக்கிறோம்.

நீங்கள் உண்மையில் உழைத்தால் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும். நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்றம் ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம்தான் மிகவும் வலிமையானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயக்த்தை படுகொலை செய்வதற்கான பல செயல்கள் ஆளும் கட்சிகளால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்தமுறையும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஆளும் கட்சி இறங்கும். வேட்பாளர்களை பணத்தால் அடிக்கும் வித்தையும் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. தப்பிப் பிழைக்குமா ஜனநாயகம் என்ற நிலை உள்ளது. அடக்குமுறைக்கு அஞ்சாத சிங்கங்கள் நம் கட்சியில் உள்ளன, அதே நேரத்தில் சிங்கங்களுக்கு மத்தியில் சிறு நதிகளும் உள்ளன. இனி சிங்கங்களுக்கு மத்தியில் சிறு நரிகள் ஒன்றாக வாழ முடியாது. நெல் மணியின் மூட்டைகளில் பதர்களுக்கு இடமில்லை. நெல்மணிகளை புடைக்கும் போது பதர்கள் பறந்து போய்விடும்.

சிறு நரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டி அடித்துவிடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டு விடும். இது அனைத்தையும் கட்சித் தலைமை கவனித்துக்கொள்ளும், பாட்டாளியான நீ இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நமது வேட்பாளர்கள் வெற்றிபெற மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேள். தடைகளை தகர்த்து நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் கூறியுள்ளார். கடந்த கிராமபுற உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போனது பாமகவுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்த நிலையில், இந்த முறை எப்படியும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்தையே அவரின் அறிக்கை வெளிபடுத்தியுள்ளது.