ஏழ்மையை அகற்ற வேண்டும் என எம்ஜிஆர் நினைத்தார், அதை செய்து காட்டி விட்டால் எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான் தான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அவர் இன்று நாகர்கோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் கட்டப்போகும் கட்டடங்கள் பூகம்பத்தையும் தாங்கும் கட்டடமாகும், தமிழகத்தில் சிலர் நிரந்தர முதல்வர் என்று கூறுகிறார்கள், நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. 

குரல் கொடுக்க தாகம் இருந்தும் கொடுக்காமல் இருந்து விட்டேன் அதனை சரிசெய்யவே தற்போது வந்துள்ளேன். இதுவரை நோட்டா ஓட்டில் எங்கள் ஓட்டும் இருக்கிறது. அவர்களும் எங்களை போன்று எண்ணம் கொண்டவர்கள்தான். தலை நிமிரும் தமிழகம் என்பது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் தான். மேசை தட்டுவதும், மேசைக்கு அடியில் கும்பிடுவதும் எங்களிடம் இருக்காது, தன்மானம் என்பது எங்கள் கட்சிக்கு தனித்துவமானது. எங்கள் கட்சியில் மாலை போடும் பழக்கம் கிடையாது.எங்கள் மரியாதை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொள்வதுதான். இன்று தென்னகத்தில் இருந்து டில்லி வரை சென்று விவசாயிகளுக்கு குரல் கொடுத்த கட்சி எங்கள் கட்சி, இது விடியல் தான் இன்னும் உச்சி வெயில் காத்திருக்கிறது. ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே. 

தேர்தல் நெருங்குவதால் நாகர்கோவிலுக்கு  வந்திருப்பதாக சிலர் நினைக்கலாம், ஆனால் நான் குழந்தை பருவத்தில் இருந்து நாகர்கோவில் வந்துள்ளேன், டி.கே.சண்முகம் ஆசிரியரிடம் பலமுறை இங்கு வந்து பயின்றுள்ளேன். தமிழகம் தலைநிமிர வேண்டும், மத்தியில் இருந்து சிறந்த மாநிலம் என்று தமிழகத்தை கூறியிருக்கிறார்கள், எப்படி சிறந்த மாநிலமாகும், தமிழகத்தின் போட்டி  என்பது உலக நாடுகளோடு இருக்க வேண்டும். அதனை எங்களால்  அமைக்க முடியும்.  ஒரு மீனவர் அமைச்சராக வேண்டும், இல்லத்தரசிகளுக்கு  ஊதியம் வழங்க வேண்டும், இவை எல்லாம் எங்களால் நடத்த முடியும்.

வீட்டில் கணவன் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும். மக்களுக்கு தான் ஆரத்தி எடுக்கிறோம் என்றாலும் எங்கள் சென்ட்ரிசம்  மக்களுக்கு நன்மை செய்வதாக தான் அமையும், தமிழகத்தில் எங்கள் சித்தாந்தம் பொருந்தாது என்றால் கம்யூனிசமும் பொருந்தாது. தேர்தலில்  வென்று ஆட்சி கட்டிலில் அமரப்போகும் போது அங்கு என்ன அவலட்சணத்தில் இருக்குமோ என்ற பயம் உள்ளது. நடிகனாக புகழ், பணம் இருந்தது ஆனால் அரசியலில் வந்த பிறகு தான் மக்களின் அன்பு கிடைக்கிறது. தமிழக மக்களிடம் கிடைத்த அன்பு விவரிக்கமுடியாதது. நான் கடமை செய்ய வந்தவன், காசு பார்க்க வந்தவன் இல்லை, தமிழகத்தில் இரண்டு பேரின் குட்டு  விரைவில் வெளிப்பட்டதும் அது சாதகமாகும். இவ்வாறு அவர் பேசினார்.