நீங்கள் அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களுக்கு பாலமாக எடுத்து சென்றால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு மற்றும் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று திருவள்ளூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், 12 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், 7,520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- தொடர்ந்து மக்கள் நலனுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. உங்களிடம் அன்புடன் கேட்கிறேன். நீங்கள் அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களுக்கு பாலமாக எடுத்து சென்றால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எனென்றால் இவ்வளவு கஷ்டம் பட்டு நிதி ஒதுக்கீடு செய்து நிதி ஆதாரத்தை பெருக்கி இவ்வளவு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேரவேண்டும். 

பல பேர் என்னிடம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா நிறைய செய்கிறீர்கள் விளம்பரம் இல்லை என்கிறார்கள். விளம்பரம் செய்வதற்கு நான் என்ன நடிகனாகவா இருக்கிறேன். பெரிய பெரிய நடிகராக இருந்தால் விளம்பரம் கிடைக்கும். ஆனால் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றார். 

உங்களை போல் இருக்கின்ற ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களும் அரசாங்கும் போடும் திட்டத்தை மக்களுக்கு எடுத்து சொல்கின்ற போது அரசாங்கம் மற்றும் எங்களுக்கும் பெயர் கிடைக்கும். அந்த பணியை முழுவதுமாக செய்ய வேண்டும் என்று அன்புடன் ஊடகம் மற்றும் பத்திரிகை மூலம் கேட்டுக்கொள்கிறேன். உங்களது கோரிக்கை அரசு கனிவோடு பரிசிலித்து நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.