I am not a terrorist.Muktha abbas Nagvi

‘‘மதரஸாவில்தான் நான் படித்தேன், நான் என்ன பயங்கரவாதியா?’’ என்று, மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மோடிக்கு கடிதம்

இந்தியா முழுவதும் உள்ள மதரஸாக்களை அரசு இழுத்து மூட வேண்டும் என ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

‘‘மதரஸாக்களில் அடிப்படை இஸ்லாமியம் கற்பிக்கப்படுகிறது, இளைஞர்களை பயங்கரவாத இயக்கங்களில் இணைய வழிவகை செய்கிறது’’ எனவும், அவர் குற்றம் சாட்டினார்.

சர்ச்சை

அவருடைய கடிதம் சர்ச்சையை கிளப்பியது.

வாசிம் ரிஸ்வி பேசுகையில், “மதரஸாக்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாட திட்டங்களுடன் இணைய வேண்டும், இஸ்லாமியர்கள் அல்லாத மாணவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். மதம் சார்ந்த படிப்புகள் விருப்பத்திற்குரியதாக இருக்கவேண்டும்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதிஉள்ளேன். இது நம்முடைய நாட்டை மேலும் வலிமையாக்கும்.

என்ஜினீயர்கள், டாக்டர்கள்...

எத்தனை மதரஸாக்கள் என்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கி உள்ளன?’’ என்றும் கேள்வி எழுப்பினார். சில மதரஸாக்கள் பயங்கரவாதிகளையும் வழங்குகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார், வாசிம் ரிஸ்வி.

இந்த நிலையில் வாசிம் ரிஸ்விக்கு கடுமையாக பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசி உள்ளார். அவர் கூறியதாவது-

‘மீடியா’க்கள்

“மதரஸாவில் அறிவுக்குப் பொருந்தாத கேள்விகளை எழுப்பும் சில முட்டாள் மனிதர்களும் இருக்கதான் செய்கிறார்கள். மீடியாக்கள் விவகாரம் அதிருப்தி அளிக்கிறது.

அவர்கள் ஏன் கேள்விகளை எழுப்புகிறார்கள், இதனை விவகாரமாக்குகிறார்கள்?... மதரஸா விவகாரம் தொடர்பாக அரசோ, பா.ஜனதாவோ கேள்வியை எழுப்பவில்லை.

நான் பயங்கரவாதியா?

எல்லா மதரஸாக்களையும் ஒரே பார்வையில் நோக்க முடியாது, இது சரியானது கிடையாது. நான் மதரஸாவில்தான் படித்தேன், நான் என்ன பயங்கரவாதியா?

மதரஸாக்கள் மீது அவதூறு பரப்பும் விவகாரம் வருத்தம் அளிக்கிறது. மதரஸா ஆசிரியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்கிறதா என்பது போன்ற விவகாரங்களில்தான் வாதமும், கவலையும் இருக்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.