நான் முன் விளைவுகள் பின் விளைவுகள் என அனைத்தையும் பார்த்தவன் என திமுகவிற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும் 2ஜி வழக்கை குறிப்பிட்டு, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கொள்ளையடித்த கட்சி திமுக என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த திமுக எம்.பி ஆ.ராசா 2 ஜி வழக்கு குறித்து கோட்டையில் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வரை அழைப்பது ஏன், நானே வருகிறேன் அது ராசாவானாலும் சரி, ஸ்டாலினாலும் சரி என்று விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து கொளத்தூரில் பேட்டியளித்த ஸ்டாலின்;- எதிர்க்கட்சிகள் அரசியல் தான் செய்யும். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் வேலை. அந்த வேலையைத் தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன் என்று விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என திமுக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதற்கு பதிலளித்த அவர், எல்லா விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். முதலமைச்சரைக் குறை சொல்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் முதல்வர். தனது முடியை பற்றி சிந்திக்கக் கூடியவர் ஸ்டாலின். 

தொடர்ந்து பேசிய அவர், நான் கோமாளி அல்ல. மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலுக்குப் பின் ஏமாளி ஆகப்போகிறார். தன்னை விளம்பரப்படுத்துவதற்காக 350 கோடி ரூபாய் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். முதலமைச்சரை, துணை முதலமைச்சரை திமுகவினர் விமர்சித்தால் கேவலமான முறையில் நான் பதிலடி கொடுப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதையும் சந்திக்க நாங்கள் தயார் என்றார்.