என்னடா நடக்குது இங்கே?’- ன்னு வடிவேலு ரேஞ்சுக்கு நிச்சயம் புலம்பும் ஜெயலலிதாவின் ஆன்மா புலம்பும். அந்தளவுக்கு அ.தி.மு.க.வினுள் குழப்பங்கள் அடிக்கடி கும்மியடிக்கத்தான் செய்கின்றன.என்னதான் பழனிசாமியும், பன்னீரும் இணைந்துவிட்டது போல் வெளியே தெரிந்தாலும் இன்னமும் இரு தரப்புக்குள்ளும் பயங்கர உரசல்கள் உச்சம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

அதிலும் பன்னீர், தர்மயுத்தம் நடத்தியபோது அவரது வலது கரமாக இருந்து எடப்பாடியார் டீமுக்கு எதிராக சட்ட ரீதியான சடுகுடுகளை ஆடி செக் வைத்தவர் மாஜி எம்.பி.யான கோயமுத்தூரை சேர்ந்த கே.சி.பழனிசாமி. பன்னீர் அணி ஆட்சியில் இரண்டற கலந்தபோது இவரும்  ஐக்கியமானார். ஆனால் தர்மயுத்தத்தில் கைகொடுத்த இவரை ஏனோ பன்னீர், துணைமுதல்வரான பின் கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியரசை விமர்சித்துப் பேசினார் கே.சி.பி. அதன் காரணமாக கட்சியிலிருந்து கட்டங்கட்டி தூக்கப்பட்டார். வெளியே சென்றவர் கட்சியின் அமைப்பு தேர்தல் முதற்கொண்டு பல விவகாரங்களுக்கு சட்ட ரீதியில் கேட் போட்டுக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் இவர்  எடப்பாடியாரை சமீபத்தில் சந்திக்க, இவர் மீண்டும் கட்சியில் இணைந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் மறு நாளே முதல்வர் ‘நாங்கள் அவரை கட்சியில் இணைக்கவில்லை. சில கோரிக்கைகள் சம்பந்தமாக சந்தித்தார் அவ்வளவே!’ என்றார். இது கே.சி.பி.க்கு கடுமையான கோபத்தை கிளப்பியது. ஆனால் விரிவாக பதில் சொல்ல அப்போது தவிர்த்துவிட்டார். 

இந்த விவகாரம் பற்றி இப்போது வாய் திறக்கும் கே.சி.பழனிசாமி “நான் அடிக்கடி சென்னையிலதான் இருப்பேன். மார்ச் 8-ம் தேதியன்னைக்கு என்னை அழைச்சு ‘எங்கே இருக்கீங்க?’ன்னு கேட்டாங்க, அரை மணி நேரத்துல கோட்டைக்கு வாங்கன்னும் சொன்னாங்க. நானும் போய் முதல்வரை, துணை முதல்வரைப் பார்த்து பேசினேன். எல்லாம் சுமூகமாதான் முடிஞ்சுது. 

ஆனால் மறுநாளே இ.பி.எஸ். இப்படியொரு விளக்கம் கொடுக்கிறார். ஏன் இந்த விவகாரம்? வில்லங்கம்!...ஒருவேளை தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ‘தலைமை செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார்கள்.’ அப்ப்டின்னு  பிரச்னையை கிளப்பியது கூட காரணமாக இருக்கலாம். 

ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கணும் எல்லாரும். நான் ஏதோ நேத்து அ.தி.மு.க.வுக்கு வந்தவனில்லைங்க. எம்.ஜி.ஆர். காலத்து ஆளு நான். தலைவர் கூடவே நெருங்கிப்பழகி அவர் கையால் வழிகாட்டப்பட்டு அரசியல் செய்தவன். தலைவரால் எம்.எல்.ஏ.வாக்கப்பட்டவன். தலைவர் வழியில் அம்மாவிடமும் அரசியல் கற்றவன், அவரது அன்பு மற்றும் மரியாதைக்குரிய இடத்தில் இருந்தவன். இதுதான் என் அரசியல் வரலாறு. ஆனால் இ.பி.எஸ். மற்றும் ஓ.இ.எஸ். ரெண்டு பேரும் 1988க்கு பிறகு கட்சிக்குள் வந்தவர்கள். ஆக ரெண்டு பேரையும் விட கழகத்தில் சீனியர் நான். என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு என்ன இருக்குது? 

என்னை கட்சியிலிருந்து நீக்கியதே செல்லாது என்கிறபோது, மீண்டும் சேர்ப்பது! எனும் விஷயம் பற்றி நான் ஏனுங்க கவலைப்படோணும்? இப்ப கட்சியில கோலோச்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் அண்ணாந்து பார்க்கும் சீனியாரிட்டி என்னோடது. என்னை கட்சியில இருந்து விலக்க, இணைக்க மீண்டும் விலக்கவெல்லாம் இவங்க யார்?” என்று தெறிக்க விட்டிருக்கிறார். 

கெளப்புங்க கே.சி.பி.