சென்னை கொரட்டூரில் கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட செயலாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை கொரட்டூரில் கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட செயலாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி ராஜலட்சுமி தம்பதியர். கொளத்தூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள ஜெகதீசன் என்பவர் ஹோட்டல் வைத்த நடத்தப் போவதாகவும், அதற்கு உங்களுடைய இடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாருங்கள் எனக் கேட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கந்தசாமி தனது மனைவியின் பெயரில் இருக்கும் அந்த இடத்தைப் ஜெகதீசனுக்கு அக்ரிமெண்ட் போட்டு வாடகைக்கு விட்டுள்ளனர்.

ஜெகதீசன் அந்த கடைக்கு 12 to 12 என பெயர் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் போட்ட ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே இடத்தை காலி செய்து தரும்படி கந்தசாமி கூறினார். உடனே இடத்தை காலி செய்ய முடியாது அதற்கு கால அவகாசம் வேண்டும் என ஜெகதீசன் கேட்டுள்ளார். இந்நிலையில் மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவகாசம் கேட்ட 15 நாட்களில் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு ஜெகதீசன் வாடகை விட்டுள்ளார். இதை உரிமையாளர் கந்தசாமி கேட்டதற்கு அடியாட்களுடன் வந்த ஜெகதீசன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, நான் பிஜேபியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து பார் எனக்கூறி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜெகதீசனை அழைத்து விசாரித்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கந்தசாமி மற்றும் அவரது மனைவியை பழி தீர்க்கும் வகையில் ஜெகதீசன் கூலிப்படை ஏவிய தாக கூறப்படுகிறது. கூலிப்படை கும்பல் கந்தசாமியின் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, கணவன் மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கியது, இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதையடுத்து தனது பெற்றோர்கள் வீழ்ந்து கிடப்பதை கண்டு அவரது மகன் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தம்பதியரை தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கொரட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.