நான் எப்போதுமே ஓபிஎஸ் பக்கம்தான்… அடித்துக் கூறும் மாஃபா பாண்டியராஜன்…

ஓபிஎஸ் அணியில் முக்கிய பங்கு வகிக்கும் மாஃபா பாண்டியராஜன் விரைவில் எங்கள் அணிக்கு வருவார் என நாஞ்சில் சம்பத் கூறிய கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்துள்ள மாஃபா, நான் எப்போதுமே ஓபிஎஸ் பக்கம்தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் வீசிய புயல் அக்கட்சியை இரண்டாக உடைத்தது. தமிழக அரசியல் அரங்கில் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா  அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மாஅணியாகவும் பிரிந்து  நின்றன. இதனால் அவ்வப்போது எடுக்கப்பட்ட இரு அணிகளின் இணைப்பு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஒதுங்கியிருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அதிமுக  அணிக்குள்ளே டி.டி.வி.தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு என்ற நிலைப்பாட்டை சில அமைச்சர்களும், சில எம்.எல்.ஏ.க்களும் எடுத்தனர். டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே ஓபிஎஸ் அணிணில் இருந்த ஆறுக்குட்டி எம்எல்ஏஇ திடீரென எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், அடுத்து 2 நாட்களில் மாஃபா பாண்டியராஜனும் அதிமுக அம்மா அணியில் இணைவார் என தெரிவித்தார்.

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் அணி மாறுவதாக வரும் தகவல் உண்மைக்கு மாறானது. இது முற்றிலும் வதந்தி. ஜெயலலிதாவின் விசுவாசிகள் எப்போதும் ஓபிஎஸ்  பக்கம் தான் இருப்பார்கள். நானும் அவருடன் தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.