சமீபத்தில் காங்கிரஸிலிருந்து நடிகை குஷ்பூ விலகி பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பூ கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜகவில் இணைந்தது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த குஷ்பூ தற்போது “நான் பாஜகவில் இருந்தாலும் எப்போதுமே பெரியாரிஸ்ட்தான். பெரியாரிய கொள்கைகளில் நம்பிக்கை உண்டு. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பகுதியிலும் தாமரை மலர பாடுபடுவேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் பெரியார் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியிருந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பூவும் பெரியாரை ஏற்று பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.