ரஜினிக்கும்  கமலுக்கும் வயதாகி விட்டது.  67 ஆண்டுகள் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு, இதையும் ஒரு தொழில்போல எண்ணி வர நினைக்கிறார்கள். இது அரசியல். மக்களுக்காக 24 மணிநேரமும் உழைப்பவர்கள்தான், இதில் இருக்க முடியும்.

திடீரென அரசியலுக்குள் பிரவேசித்து, பதவியைப் பிடித்துவிடத் துடிக்கிறார்கள். வீட்டிலிருந்து பேட்டி கொடுப்பவர்களால் அது முடியாது. உழைப்பின் மூலமாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எத்தனையோ பேர் கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டார்கள் என ரஜினியை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ’’விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மருத்துவக்கல்லூரிக்காக 24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெறும். மருத்துவக் கல்லூரி பணிகள் ஓராண்டுக்குள் முடியும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும், முதல்வரை பற்றி தவறாக பேசி வருகிறார்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டி கவுரவித்தது அ.தி.முக. அரசு தான். இந்த விவரங்களை அறியாமல் அவர் பேசக்கூடாது. நடிகர்கள் ரஜினி, கமல் அவர்களது பணியை மட்டும் செய்ய வேண்டும். நான் ரஜினி ரசிகன். அவர் படங்களை விருப்பி பார்ப்பேன். ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறளுடன் திருவள்ளுவர் படம் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வப்போது பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் குறள்கள் மாற்றப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.