ஆபத்து நிறைந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான உத்தரவு குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கிட்டத் தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, தமிழக டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்திருக்கிறது ஹைட்ரோ கார்பன் பூதம். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிக்கு, கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஏற்கனவே 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, மேலும் ஒரு ஏலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. இது தமிழக மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் டுவிட்டர் பதிவில்;- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பி.களை வைத்திருக்கின்ற தி.மு.க.வும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.