மலிவான விளம்பரத்துக்காக கண்டபடி பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறைக்கு செல்வது உறுதி என அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக தனது முகநூலில் கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்தார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. ராஜாவை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கடும் எதிர்ப்பு எழுந்ததால் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக ராஜா பேட்டியளித்தார்.

இந்நிலையில்  இன்று ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர்கள்  மீது திணிக்கப்பட்டதே திராவிடம் என்றும்  தமிழ் என்ற சனியனே இருக்க கூடாது என்று பெரியார் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும்  கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார்,   பெரியார் அது போன்று பேசியதற்கான ஆதாரமும் இல்லை என்றும்,  ஒருவர் மலிவான விளம்பரத்துக்காக இந்த மாதிரி கூற்றுகளை தயவு செய்து சொல்லக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி என்று கூறிய அமைச்சர் ஜெயகுமார், ராஜா பிடிச்சு உள்ள போட வேண்டிய ஆள்தான்  என்றார்.

இந்த மாதிரி ஒரு தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்புகின்ற வேலையில் மக்களை திசை மாற்றி அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று  நினைக்கும் எச். ராஜா கைது செய்யப்படுவார் என அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.