வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.சி. சண்முகத்துக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகளாக முதல்வரும், துணை முதல்வரும் கூறியிருப்பது புதிய நீதிக் கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தோல்வியடைந்தார். கதிர் ஆனந்த் 4.85 லட்சம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், ஏ.சி. சண்முகம் 4.77 லட்சம் வாக்குகள் பெற்று நெருக்கமாக வந்து தோல்வியைத் தழுவினார். தேர்தல் தோல்விக்கு பிறகு, ஏ.சி. சண்முகம் அதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தத் தோல்வி அவரை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாக அவருடைய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


வேலூர் தோல்வி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் முடிவு அதிமுக செல்வாக்கை உணர்த்தும் வகையில் இருந்ததைக் கோட்டிட்டு காட்டியிருந்தார்கள். “அதிமுக தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான், தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக வெற்றிக்கனியைப் பறிக்கும் என்பது வேலுார் தொகுதியில் அதிமுக பெற்ற ஓட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயலலிதா அளித்து சென்ற ஓட்டுகளின் சதவீதம் சிந்தாமல், சிதறாமல், அப்படியே உள்ளதை, வேலுார் தொகுதியில், இரட்டை இலை பெற்றிருக்கும் ஓட்டுகள் பறைசாற்றுகின்றன.” என்று தெரிவித்திருந்தார்கள். 
இந்த அறிக்கை புதிய நீதிக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேமுதிக. பாமக, மதிமுக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 3.24 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 3.83 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 60 ஆயிரம்.
தற்போது மதிமுக  தவிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் 4.77 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிமுக ஓட்டுகளோடு சேர்ந்து சுமார் 1.53 லட்சம் வாக்குகளை மட்டுமே ஏ.சி. சண்முகம் கூடுதலாக பெற்றுள்ளார் என்கிறார்கள் புதிய நீதிக்கட்சியினர். தற்போது பெற்ற வாக்குகள் அதிமுக வாக்குகள் என்றால், கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பெற்ற 3.24 லட்சம் வாக்குகள் யாருக்கானது என்ற கேள்வியையும் அக்கட்சியினர் முன் வைக்கிறார்கள்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் ஏ.சி. சண்முகம் அவருடைய தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக கூடுதல் வாக்குகள் பெற்றதைப் போலவே இந்த முறையும் அவருக்கென இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக இத்தனை வாக்குகளை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலூரில் ஏ.சி. சண்முகம் வெற்ற 4.77 லட்சம் வாக்குகளில் அவருடைய செல்வாக்கால் கிடைத்த வாக்குகள் எவ்வளவு, அதில் அதிமுக வாக்குகள் எவ்வளவு என்ற புதிய பட்டிமன்றம் தற்போது அக்கூட்டணியில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.