அம்மாபட்டி, அத்திப்பாளையம் உள்ளிட்ட அத்தனை கிராமங்களின் ஊராட்சி தேர்தலும் ஏதோ அமெரிக்க அதிபர் தேர்தல் போல் ஏகப்பட்ட பில்ட் - அப்கள், எதிர்பார்ப்புகள், தடபுடல் செலவுகள், எக்ஸ்ட்ரா கவனிப்புகளுடன் நடந்து முடிந்திருக்கிறது. ‘தேர்தலை நடத்துறதுல எங்களுக்கு இன்னாபா பயம்? நாங்க நிக்குறோம், ஜெயிக்குறோம்!’ என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டபடி களமிறங்கிய ஆளுங்கட்சியை வெச்சு செய்துவிட்டார்கள் மக்கள். ஆம் அ.தி.மு.க.வை விட அதிகப்படியான இடங்களில் ஜெயித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. ஆக தமிழகத்தில் முதல் கட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல்கள்  ஏக கலகலப்புகள், களேபரங்களுடன் நடந்து முடிந்திருக்கின்றன. 
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! சாதாரண உள்ளாட்சி பதவிகளுக்கு ஏன் இத்தனை அமர்க்கள ஆர்பாட்டங்கள்? சம்பாதித்துக் கொட்டுவதற்கு இது என்ன எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியா? என்று டவுட்டாகும் நபர்கள் மட்டும் தொடர்ந்து இந்த செய்தியை வாசியுங்கள். தலைசுற்றிப் போகும் உங்களுக்கு.

உள்ளாட்சி பதவிகளில் இருப்போர் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பார்கள் என்பது பற்றிய அலசல் அட்டவணை இதோ....

*    பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் மத்திய, மாநில அரசு நிதி, ஊராட்சியின் பொது நிதி ஆகியவற்றை கையாள்வதற்கு மூன்று முதல் ஆறு வங்கிக் கணக்குகள் இருக்கும். இதனை ஊராட்சித் தலைவர்தான் கையாளுவார். இந்த நிதியை செலவு செய்யும் அதிகாரமானது தலைவருக்குதான் உண்டு. (இது போதாதா, தலைவர் தட்டி கெளப்புறதுக்கு?)

*    ஊராட்சி தலைவர்களின் பி.ஏ.க்களாக ஊராட்சி செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கணக்குப் பிள்ளை போல் பக்காவாக எல்லாவற்றையும் ‘கரெக்ட்’ பண்ணும் நபர்கள் இவர்கள். பொதுவாக தலைவருக்கு வேண்டிய நபர்கள்தான் இப்படி செயலாளராக நியமிக்கப்படுவர்.

*    தேர்தல் முடிந்தவுடன் கூடும் முதல் ஊராட்சி மன்றக் கூட்டத்திலேயே பொது நிதி, நிதிக்குழு மானிய நிதி, தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கீடு நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு நிதி ஆகியன ஒதுக்கப்படும். இதை கொண்டு புதிய தார்சாலை, சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, அங்கன்வாடி அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், சுகாதார பணிகள் ஆகியவை நடத்திடும் பொருட்டு நிதிகள் ‘கை’யாளப்படும். இப்பணிகளை செய்யும் காண்ட்ராக்டர்கள் பெரும்பாலும் ஊராட்சி தலைவருக்கு வேண்டப்பட்ட நபராகவே இருப்பார்கள்.

*    பதவியேற்ற அரை வருடத்திலேயே சில லட்சங்கள் மதிப்பிலான பணிகள் நடைபெறுவதற்கான ஒதுக்கீடுகள் நடக்கும். இதில் தலைவருக்கு செம்ம கமிஷன் கிடைக்கும். 
*    மோட்டார் பைப் ரிப்பேர், புதிய மோட்டார் வாங்குதல், தெருவிளக்குகளுக்கு பல்பு வாங்குவது, சுகாதாரண பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர் வாங்குவது, கொசு மருந்து வாங்குவது என்று துவங்கி அத்தனை பணிகளிலும் கட்டிங், கமிஷன் அள்ளப்பட்டு கல்லா நிறையும். தரம் குறைந்த பொருளை வாங்கிவிட்டு, அதற்கு முதல் தரமான விலையை போட்டுப் பணத்தை எடுப்பார்கள். வாங்காத பிளீச்சிங் பவுடர், விளக்குகளுக்கு பணம் மட்டும் எடுக்கப்படும். 
*    ஊராட்சி பகுதிகளில் வீடு கட்டுவது முதல் ஃபேக்டரி கட்டுவது வரை அனைத்து அப்ரூவல்களுக்கும்  பலப்பல லட்சங்கள் லஞ்சமாக வந்து குவியும். அதன் பின் பைப் கனெக்‌ஷனில் துவங்கி மின்சார இணைப்பு, கூடுதல் நில ஆக்கிரமிப்பு என எல்லாவற்றிலு வெளுத்துக் கட்டுவார்கள். தலைவர்களுக்கு லட்சக்கணக்கில் கிடைத்தால், கவுன்சிலர்களுக்கு சில பல ஆயிரங்கள் கமிஷன் கிடைக்கும். 
...இப்படி ஊராட்சி பதவிகளில் இருப்போரின் பாக்கெட்டில் பணம் வந்து குவிந்து கொட்டுவதை பற்றி விளக்கிக் கொண்டே போகலாம். 
ஆக வீட்டில் இருக்கும் அண்டா, குண்டாவை விற்று பிரசாரத்தில் செலவு செய்து, கிட்டத்தட்ட பஞ்சப் பராரியாய்  தேர்தல் நாளன்று தெருவில் நிற்கும் நபர்கள், ஜெயித்த பின் அடுத்த ஐந்து வருடங்களில் கோடீஸ்வரர்களாகிவிடுகிறார்கள். இதனால்தான் இந்தப் பதவிகளுக்கு இம்பூட்டு போட்டி!