How to do a car accident death on ADMK
அ.தி.மு.க.வுடன் விவகாரம் வைத்துக் கொண்ட நபர்கள் மர்மமான கார் விபத்தில் இறப்பது ஏதோ இப்போதுதான் நிகழ்கிறது என்று நினைக்க வேண்டாம். ஜெ., இருக்கும்போதும் கூட இப்படியான துயரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்படியொரு மர்ம மரண வழக்கு மீண்டும் கியர் அப் ஆக இருப்பதுதான் சென்சேஷனல் பாயின்ட்!
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வின் மாஜி செயலாளராக இருந்தவர் செல்வராஜ். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் மீது ஜெ.,வுக்கு தனி அபிமானம் உண்டு. காரணம் பல வருடங்களாக பலரை மாற்றியும் கூட உயிர்ப்பற்று கிடந்த அம்மாவட்ட அ.தி.மு.க.வை தட்டி எழுப்பி உருவேற்றியவர் இந்த செல்வராஜ். அசரவைக்கும் களப்பணியாளர். இன்னொன்று ஜெ.,வின் கொடநாடு பங்களாவுக்கு எதிராக தி.மு.க. அரசு அப்போது முஸ்டி முறுக்கியபோது கில்லியாக நின்று எதிர்த்து போராடிய மனிதர். இதுதான் அம்மா வைத்த அபிமானத்துக்கு காரணம்.
இப்பேர்ப்பட்ட மனிதரை அ.தி.மு.க. பவர் சென்டர் ஒன்று பதவியை இழக்க வைத்தது. மனம் ஒடிந்து போன செல்வராஜ் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக அந்தர் பல்டி அடித்துப்பார்த்தார் ஆனாலும் வேலைக்கு ஆகவில்லை. இறுதியில் அந்த பவர் சென்டர்களின் தகிடுதத்தம் குறித்த சில ஆதாரங்களை திரட்டிக் கொண்டு ஜெ.,வை சந்தித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றார்.
இந்நிலையில்தான் கடந்த 2011_ம் ஆண்டில் பல்லடத்திலிருந்து கோவை வரும் வழியில் காரணம்பேட்டை அருகே ஒரு கார் விபத்தில் காலியானார் செல்வராஜ். பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டிய அந்த வழக்கு சிலரது கைங்கர்யத்தால் அமைதியாக்கப்பட்டது. இந்த மரண பின்னணி எதுவும் ஜெ.,வின் கவனத்துக்கு பகிராமல் மறைக்கப்பட்டது என்று நீலகிரி மாவட்ட உண்மை அ.தி.மு.க.வினர் புலம்பி கொட்டினர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் கொடநாடு கொள்ளையை தொடர்ந்து அடுத்தடுத்து மர்ம கார் மரணங்கள் நிகழ்ந்து அது தொடர்பான விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், செல்வராஜின் மரண விவகாரத்தையும் தோண்டி எடுக்க வேண்டுமென்று அவரது குடும்ப உறவு ஒன்று கோரிக்கை மனு போட்டுள்ளார்.
தமிழக அரசிடமோ அல்லது போலீஸிடமோ இதை கொண்டு சென்றால் பெரிய அழுத்தம் கிடைக்காது என்கிற எண்ணத்தில் வட தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. புள்ளி ஒருவரின் மூலம் டெல்லிக்கே இந்த கோரிக்கை மனு டைரக்டாக சென்றிருக்கிறதாம்.
செல்வராஜின் மரண விவகாரம் தூசி தட்டப்பட்டால் அ.தி.மு.க.வில் கோலோச்சிய சில நபர்களுக்கு சிக்கல் நிச்சயம் வரலாம்! என்று தகவல். பழைய கார் விபத்துக்களை தோண்டியெடுத்து விசாரிக்கவே தனி கமிஷன் அமைக்கணும் போலிருக்கே நாராயணா!
