உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில் சென்னை மேற்குமாவட்டச் செயலாளர் பதவிக்கு சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் புகைச்சல் எழுந்துள்ளது.

திமுகவின் மிக முக்கிய செயல் வீரர்களில் ஒருவராக இருந்த ஜெ.அன்பழகன் வகித்து வந்த பதவி என்பதால் அதில் யாரை நியமிக்கப்போகிறார் ஸ்டாலின் என்கிற கேள்வி பல நாட்களாக நீடித்து வந்தது. ஆனால் அந்த பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ஆதரவாளர் ஒருவரை நியமித்து கட்சியில் இனி தான் எடுப்பது தான் முடிவு என்பதை பறைசாற்றியுள்ளார். அன்பழகன் மறைவுக்கு பிறகு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. அதிலும் சீனியர்களான அண்ணா நகர் மோகன், துறைமுகம் எம்எல்ஏ கு.க.செல்வன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

இது தவிர கலைராஜனும் கூட எப்படியாவது சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிவிடும் முயற்சியில் தீவிரம் காட்டினார். இதே போல் விருகம்பாக்கம் தனசேகரன், திருவல்லிக்கேணி மதன்மோன், ஆயிரம் விளக்கு மோகன் போன்ற செயல் வீரர்களும் கூட மாவட்டச் செயலாளர் கனவில் காய் நகர்த்தி வந்தனர். இவர்கள் அனைவருமே சென்னையில திமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருபவர்கள். அதிலும் ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த மோகன் அத்தொகுதியில் மிகச்சிறந்த செயல் வீரராக அறியப்பட்டவர். இதே போல் விருகம்பாக்கம் தனசேகரனும் கூட மாவட்டச் செயலாளர் பதவிக்கு தகுதியானவர்.

அதே சமயம் திமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருக்க கூடிய அண்ணா நகர் எம்எல்ஏ மோகன், மற்றொரு எம்எல்ஏ கு.க.செல்வம் போன்றோரும் கூட மாவட்டச் செயலாளர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் கேட்டதாக சொல்கிறார்கள். இதற்கிடையே அன்பழகனின் மகன் மற்றும் சகோதரரும் கூட மாவட்டச் செயலாளர் பதவி கனவில் இருந்துள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் மீறி சென்னை திமுகவில பெரிய அளவில் அறிமுகம் இல்லாத சிற்றரசு மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார். சிற்றரசு மாவட்டச் செயலாளர் ஆனதற்கு உதயநிதி தான் காரணம் என்கிறார்கள்.

சீனியர்கள், செயல் வீரர்கள் என அனைவரையும் ஓரம்கட்டி சிற்றரசுவை சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக நியமித்திருப்பதன் மூலம் திமுகவில் தனக்கு உள்ள அதிகாரத்தை உதயநிதி வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். பெரிய அளவில் அறியப்படாத சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றி வந்தவர். இந்த பதவியும் கூட உதயநிதி வந்த பிறகு சிற்றரசுவுக்கு கிடைத்தது என்கிறார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பின் போது சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தவர்களிலி சிற்றரசு குறிப்பிடத்தகுந்தவர்.

சென்னையில் உதயநிதியின் தேவையை அறிந்து செய்து கொடுக்க கூடிய முக்கிய திமுக நிர்வாகிகளில் சிற்றரசுவும் ஒருவர். இதற்கு பிரதிபலனாகேவே சிற்றரசுவை உதயநிதி மாவட்டச் செயலாளர் ஆக்கியுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் தனது தந்தை பாணியில் கட்சியில் வளரும் போதே தனக்கு நெருக்கமானவர்களை கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமிப்பது என்கிற வியூகத்துடன் உதயநிதி செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.