சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 10.10 கோடி ரூபாய் அபராத தொகையை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் பிப்ரவரியுடன் முடிவுக்கு வருகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 2022 பிப்ரவரி வரை அவர் சிறையில் இருக்க நேரிடும் என்பதால், அபராதத்தை செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கான 10.10 கோடி ரூபாய் அபராதம் இன்று பிற்பகல் செலுத்தப்பட்டது. பல்வேறு நபர்களின் பெயரில் வரைவோலை (டிடி) எடுக்கப்பட்டு நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. வரைவோலையை எடுத்தவர்கள் மற்றும் எவ்வளவு தொகைக்கு வரவோலை எடுக்கப்பட்டது என்ற விவரங்களை பிரபல தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையிலுள்ள ஸ்டேட் வங்கியில் வசந்தா தேவி என்பவரது பெயரில் 3.75 கோடி ரூபாய்க்கு வரைவோலை (எண்: 656358) எடுக்கப்பட்டுள்ளது. இதே வங்கியில் 656354 என்ற எண்ணில் பழனிவேல் என்பவரது பெயரில் 3.25 கோடி ரூபாய்க்கு வரைவோலை எடுக்கப்பட்டது. ஆக்சிஸ் வங்கியில் ஹேமா என்பவர் 3 கோடி ரூபாய்க்கான வரைவோலை எடுத்து சசிகலாவுக்காக அளித்துள்ளார். சசிகலா அண்ணன் மகன் விவேக் பெயரில் 10,000 ரூபாய்க்கான டிடி எடுக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகைக்கான டிடிக்களுக்கு ஒப்புதல் அளித்த நீதிபதி, அடுத்த கட்ட ஆவணப் பணிகளுக்காக பணம் செலுத்தும் பிரிவுக்கு அனுப்பினர்.