மருத்து கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் நலனுக்காக கட்டுப்பாடுகள் அவசியமான ஒன்றாக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் குறித்து திருவிக நகர் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார். கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அமைச்சர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் என சுற்றிச் சுழன்று கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திருவிக நகர் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார், அந்த ஆய்வுக்குப்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் நோய்தொற்றை கட்டுபடுத்தவும், உயிரிழப்புகளை குறைப்பதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து மீண்டு வந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட முன்மாதிரியான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும், முக கவசம் அணிவதையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தீவிர மருத்துவ பரிசோதனை முகாம்கள் கிராமங்கள் தோறும், வீடுகள் தோறும் நடத்துப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த நோய்தொற்றால் மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர், தடுப்பு மருந்து கண்டுபிடிப்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவ குழு பரிந்துரையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
மருந்து கண்டறியும் வரை மக்கள் நலனுக்காக கட்டுபாடுகள் அவசியமான ஒன்றாக உள்ளது. சொந்த ஊருக்கு செல்ல விருப்பம்  தெரிவித்த புலம்பெயர்ந்தவர்களையும், அவர்களுடைய சொந்த ஊருக்கி அனுப்பி வருகிறோம். 

மருத்துவர்கள் குழுவின் ஆலோசனைகளின்படியே ஊரடங்கில் தளர்வுகளும், கட்டுபாடுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என தெரியும் போது முன்கூட்டியே பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். சூழலை உணர்ந்து மக்கள் முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நண்பர்கள் உறவினர்களுடம் இணைந்து பழகும் பழக்கம் நம்மிடம் அதிகம் உள்ளது, ஆனால் தற்போதைய சூழலை உணர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மீன் சாப்பிடவதை யாரும் தடுக்க முடியாது, ஆனால் அனைவரும் ஒரே நாளில் சென்று வாங்குவதை தவிர்க்க வேண்டும்.