அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்ட சம்பவத்திற்கு, தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்நச்சு செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியை அடுத்த குழித்துறை சந்திப்பில் அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும்  முயற்சியாகவே இது நடந்து வருகிறது. பெரியாருக்கு காவி சாயம்,  எம்ஜிஆருக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில இந்து அமைப்புகள், கட்சிகள் செய்த இச்செயலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில், இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் காவி கொடி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காவி கொடியை அகற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ள அம்மா மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  அதில், தந்தை பெரியார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச்  சிலைகளைத்  தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் காவிக்கொடியால் அவமதிக்கப்பட்டிருப்பது  கண்டனத்திற்குரியது. இத்தகைய நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு இவ்வளவு துணிச்சல் இந்த விஷமிகளுக்கு எங்கிருந்து வரும்? சமூக அமைதியைச்  சீர்குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

 

இதே போல தமிழக அரசுக்கு அவர் வைத்துள்ள மற்றொரு கோரிக்கையில் , 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கப்படாத நிலையில், அவர்கள் பெற்ற 7 ஆண்டுகளுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும். என தமிழக முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.  பேராசிரியர் பணிக்கான SLET,NET போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப் போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன், அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும். என வலியுறுத்தியுள்ளார்.