மூத்த  கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் மறைந் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீடுகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து நல்லகண்ணு தான் குடியிருந்த வீட்டை கால செய்து ஒப்படைத்தார்.  இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம்  எழுந்துள்ளது. 

இந்நிலையில் சமூக சேவகர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான புதிய கொள்கை முடிவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சி.ஐ.டி. காலனியில் நகர அபிவிருத்திக் கழகம் மூலமாக 1953-ஆம் ஆண்டில் 119 வீடுகள் கட்டப்பட்டு பொது மக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் வீடுகளை இடித்து விட்டு புதிய திட்டம் செயல்படுத்த கடந்த 2004-05-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது. இந்த நிலையில், 2007-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அங்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அவர் தனது சொந்த செலவில் வீடுகளை பழுது நீக்கி குடியிருந்து வந்தார். இந்த நிலையில், வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், 2011-ஆம் ஆண்டில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு அங்கு குடியிருந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனை எதிர்த்து, குடியிருப்புதாரர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலையில் வீடுகளை காலி செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இதனிடையே, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கடந்த பிப்ரவரியில் தள்ளுபடி செய்யப்பட்டன.

புதிய கொள்கை முடிவு: நீதிமன்ற உத்தரவு காரணமாக, குடியிருப்புதாரர்கள் வீடுகளை தாங்களாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்கத் தொடங்கினர். இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளனர். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 11-ஆம் தேதியன்று வீட்டை காலி செய்து விட்டார். மறைந்த முதுபெரும் தலைவர் கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.

சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில், மாத வாடகைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. 

இந்தக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன், மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த தலைவர் கக்கனின் குடும்பத்தார் உள்பட பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கியப் பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில் மாத வாடகைக்கு வீடுகள் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  .இதனை உறுதிப்படுத்தினார். இதற்கு நல்லகண்ணு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.