வேலூரில் வெற்றிக் கொடியை நாட்டியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்து வருகிறார்கள் அதிமுகவை சேர்ந்த உடன் பிறப்புகள். அதன் ஒரு பகுதியாக விருதுநகரை சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெயரில் கே.டி.ஆர் உணத்தை தொடங்கி அதகளப்படுத்தி இருக்கிறார் அவரது ஆதரவாளரான சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன். 

வெளியூர், உள்ளூர் ஆட்கள் தேர்தல் பணியாற்றும் போது பிரியாணி முதல் சகலமும் கொடுத்து கட்சி தலைமை உபசரிக்கும். பாகெட் பணி, இரவு நேர உற்சாக பானம் என தொண்டர்களுக்கு உபசரிப்பு அதகளப்படும். அனைத்து அமைச்சர்களும், எம்.,எல்.ஏக்களும் வேலூரில் குவிந்துள்ளதால் அங்கு பண மழை பொழிந்து வருகிறது. 
 
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் விருதுநகர் பகுதியை சேர்ந்த தொண்டர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்காக, அந்த ஏரியாவில் அமைச்சர் பெயரில் ஒரு ஹோட்டலே ஆரம்பித்து மூன்று வேளையும் இலவசமாக சைவ, அசைவ உணவு பரிமாறி வருகின்றனர். அந்த ஓட்டலை ராஜேந்திர பாலாஜியின் விசுவாசியும் சாத்தூர் எம்.எல்.ஏ.,வான ராஜவர்மன் ஆரம்பித்துள்ளார். 

'கட்சிக்காக வேலை செய்து வரும் வெளியூரில் இருந்து வந்துள்ள தொண்டர்கள் வெவ்வேறு கடையிலும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகையால், நண்பர் ஒருவரின் ஓட்டலைப் பிடித்து அங்கே சாப்பாடு போடறோம். இதற்காக, சாத்தூரில் இருந்தே சமையல் ஆட்களைக் கூட்டி வந்து சமைக்கிறோம்’’ என்கிறார் ராஜவர்மன்.