புதியதாக உருவாக உள்ள ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்ட மசோதா, தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி வழங்கும் சட்டமுன்வடிவு மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு செப்டம்பர் 23–ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓசூர் நகராட்சி, தமிழகத்தின் 13–வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி, தமிழகத்தின் 14–வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

இதற்கிடையே, இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை வைத்திருந்தால் ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்டம் மற்றும் தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி வழங்கும் சட்டமுன்வடிவு பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம், 2 புதிய மாநகராட்சிகள் உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.