தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, கேப்டனின் வீடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தன. 

இந்நிலையில், குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரது உடல் நிலை குறித்து, சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.... 

திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திரு. விஜயகாந்த் அவர்களின் மருத்துவ நிலை அறிக்கை:

தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழுவின் கண்கானிப்பில் உள்ளார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் முதல் நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு. விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது நோய்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகள் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தேமுதிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.