வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்கம் வெற்றிபெற்றால் சொந்த மருத்துவமனையில் வேலூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதிமுக கூட்டணியில் இணைந்த புதியநீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கல்வியாளரும், புதியநீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். பணபலமும், களப்பணியாற்றுவதிலும் வல்லவரான ஏ.சி. சண்முகம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் பி. செங்குட்டுவனிடம் தோல்வியடைந்தார். செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  ஏ.சி. சண்முகம் 324326 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார்.  

அவர் பெற்ற வாக்குகள் பிற கட்சியினரை திகைக்க வைத்தது. இம்முறை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதால் மேலும் உற்சாகமாக களமிறங்கியுள்ளார் ஏ.சி.சண்முகம். ஆனால் இம்முறை திமுக சார்பில் அவரை எதிர்த்து களமிறங்கப்போவது திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.  ஆகையால் போட்டி கடுமையாக உள்ளது. கடந்த முறையே 45 கோடி ரூபாயை வாரியிறைத்த ஏ.சி.சண்முகம் இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

அதற்காக ஆறு தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் தொகுதி மக்கள் தன்னை வெற்றிபெறச்செய்தால் பெங்களூருவில் உள்ள தனக்கு சொந்தமான ராஜ ராஜேஸ்வரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைவருக்கும் ஐந்து ஆண்டுகள் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என அறிவித்துள்ளார். 

பெங்களூரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியை நிறுவி, அந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். அதற்காக அவருக்கு ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அஜ்மான் நகரில், பன்னாட்டு மருத்துவ அறிவியல் கழகமும், கல்ஃப் மருத்துவ பல்கலைகழகமும் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கௌரவ டாக்டர் பட்டத்தை  வழங்கியது. ஆகையால் அவர் தரும் வாக்குறுதி நிறைவேற்றுவார் என அதிமுக ரத்தத்தின் ரத்தங்களும் நம்பிக்கையை விதைத்து வருகின்றனர்.