குரு பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மீக பூமியான  இமயமலைக்குச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்ததோடு, குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களின் ரீலீசுக்கு முன்பு எப்போதும் இமயமலைக்குச் சென்று தனது குருவான பாபாவிடம் ஆசிபெறுவது வழக்கம். இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி நடித்த காலா படம் ரிலீசாக உள்ள நிலையில் வழக்கம்போல் ரஜினி இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.

ஆன்மீக பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும்  தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதன் முறையாக தற்போது  இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு 10 முதல் 15 நாட்கள் தங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலைக்கு சென்றுள்ள ரஜினி அங்கு பாபா குகையில் தியாகம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் ஜம்முவில் உள்ள சிவஹோரி ரான்சூர் என்ற இடத்தில்  ரஜினிகாந்த் தங்கியுள்ளார். இதையடுத்து இன்று அங்குள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் அங்கு வழிபட்டார்.

இதையடுத்து ரஜினி பாபாவிடம் ஆசி பெற்றார். மேலும் அங்கு குதிரைவசாரி செய்தார். ரஜினி குதிரை சவாரி செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.